தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5ம் வகுப்பு வரை 2000 ரூபாயும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு 6000, 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 8000 ரூபாயும், பட்டப்படிப்புக்கு 12,000, முதுகலை பட்டத்திற்கு 14,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ், பிஹெச்டி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 50 மாணவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் கூறியதாவது, மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தியுள்ளது. அதன்படி ஆராய்ச்சி படிப்பு பிஎச்டி மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் 50 மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் செயல்படும் என்று கூறினார்.