சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக – அமமுக இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன தொகுதிகள் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சி அமமுக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்து ஆகியுள்ளது. தொகுதி உடன்பாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கையெழுத்திட்டுள்ளனர்.

பின்னர் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் திராவிடர்கள் தான். திராவிட கட்சிகளை எதிர்ப்பதாக பாஜக கூறுவது ஸ்டாலின், இபிஎஸ் ஆகியோரை தான். டெல்டா தொகுதியில் போட்டியிடவே எனக்கு விருப்பம். என்னென்ன தொகுதிகள் என்பதை பாஜக தலைமை தான் அறிவிக்கும். நாங்கள் கேட்ட தொகுதியில் எங்களுக்கு தரப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தான் எங்கள் கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். பொறுத்திருந்து பார்ப்போம். நான் அரசியல்வாதியாக பிறந்த மண் தேனி. அதனால் தேனி பகுதி மக்களுடன் எனக்கு பாசப்பிணைப்பு உண்டு.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் இம்முறை சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக அறிவித்த உடன் அமமுகவுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

முதலில் பாஜக எங்களுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தார்கள். பாஜக கூட்டணிக்கு கூடுதல் கட்சிகள் வந்ததால் குறைத்து தந்துள்ளார்கள். கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குங்கள், ஒரு தொகுதி கூட அமமுகவுக்கு ஒதுக்குங்கள் என்றுதான் கூறியிருந்தோம். குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளிளாவது போட்டியிடுங்கள் என்று பாஜக தான் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. போதும் என்ற மனநிலை இருந்ததால் 2 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டோம். இரண்டு தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று கூறினார்.