
பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் ஆனந்த் ஸ்வீட்ஸ் மற்றும் சவாரிஸ் என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு வந்த பெண் கழிப்பறையை பயன்படுத்தும் போது ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Itskrithu என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார். கழிப்பறைக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு தன்னை யாரோ பார்ப்பதாக சந்தேகம் எழுந்தது. சில நொடிகளில் கழிப்பறைக்கு வெளி பக்கமாக ஒரு செல்போன் இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த இளம்பெண் வெளியே ஓடி வந்து தனது தோழிகளிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
View this post on Instagram
இதனை அடுத்து ஹோட்டல் மேலாளரின் முன்னிலையில் ஊழியர்களின் கைப்பேசிகள் பரிசோதிக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று இரவு 9.10 மணிக்கு ஒரு மர்ம நபர் வெளியே சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த நபர் தொழில்நுட்ப ஊழியர் என்பது தெரிந்ததும் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அந்த வீடியோவை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆனந்த் ஸ்வீட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற செயல்களை மன்னிக்க முடியாது என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.