
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா மீது எழுந்த முறைகேடு புகார் காரணமாக, அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது. அண்மையில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தை அணைக்கும் போது, பல அறைகளில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். உடனே இது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, தகவல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் சென்றது.
இதையடுத்து சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலீஜியம் கூட்டம் நடத்தி, யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், இத்தகைய முறைகேடுகள் தொடர்பாக இடமாற்றம் போதாது, அவரை நீதிபதி பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கொலீஜியத்தில் சிலர் வலியுறுத்தியுள்ளனர். நீதித்துறையின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.