பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி, அவருடன் வாமிகா கபி இணைந்து நடித்துள்ள ‘DC’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த பிரமாண்டமான வசூல் சாதனையை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஆரம்பம் முதலே விறுவிறுப்பான மற்றும் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளில் குடும்பத்துடனும் இளைஞர்களுடனும் ரசிகர்கள் திரண்டு வந்து பார்த்ததால், படத்திற்குத் தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்களும் அபார வரவேற்பும் கிடைத்து வருகின்றன.
மேலும், இப்படத்திற்கு அனிருத் அமைத்துள்ள பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்குகளில் ரசிகர்களைத் துள்ளிக்குதிக்க வைத்து, படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னணி இயக்குனராக வலம் வந்த லோகேஷ் கனகராஜ், கதாநாயகனாக களமிறங்கிய முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
