கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் என்பவர், தனது மனைவி வாணி மற்றும் 3 வயது மகள் ஹிருதிக்‌ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றனர்.

மகளைக் நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறவே சென்றுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியவில்லை என காரணம் கூறி, போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, அவசர நிலையை விளக்கி, குழந்தையின் உடல் நலம் பற்றி கூறிய பிறகும் அசோக்கை போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த பதட்டத்தின் போது, போலீசார் அவருடைய வாகனத்தை ஆவேசமாக இழுத்ததால், மோட்டார் சைக்கிள் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

இதில், 3 வயது ஹிருதிக்‌ஷா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெற்றோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகு, உயிரிழந்த குழந்தையின் உடலை மடியில் வைத்துக்கொண்டு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா நகர மக்கள் அவர்களுக்கு ஆதரவாக குவிந்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி மல்லிகார்ஜுன பாலதண்டி நேரில் வந்து, 3 போக்குவரத்து போலீசாரையும் (ஜெயராம், நாகராஜ், குருதேவ்) பணியிடை நீக்கம் செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தற்போது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து போலீசாரின் மனிதநேயம் குறைந்த செயல்பாடுகள் குறித்து மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.