ஹார்முஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஈரானின் ஏவுகணை நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதல் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த இந்தத் திட்டத்தின்படி, ஈரானின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள நிலத்தடி ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள் மீது 5,000 பவுண்டு சுமார் 2,267 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன.
மேலும் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் ஏவுகணைத் திறனை முடக்குவதே இத்தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானின் ராணுவக் கட்டமைப்பிற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையின் ‘கதவுகள்’ மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இதனால் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்துக் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரானின் ராணுவ இலக்குகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், இனி உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்தப் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உலக எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே கடந்து செல்வதால், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
