ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் சுமாரான கேப்டன்சி காரணமாக, அவரை பதவியிலிருந்து நீக்க அணி நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள மும்பை அணி, குறிப்பாகச் சென்னை சூப்பர் கிங்ஸிடம் 103 ரன்கள் வித்தியாசத்தில் வாங்கிய மரண அடி நிர்வாகத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று சீசன்களாக பாண்ட்யா தலைமையில் அணி ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்குச் செல்லாத நிலையில், வீரர்களை ஒருங்கிணைப்பதில் அவர் தோல்வியடைந்துவிட்டதாகக் கிளம்பியுள்ள விமர்சனங்கள் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளன.
பாண்ட்யாவுக்கு மாற்றாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ‘கிங் ஆஃப் மும்பை’ ரோகித் சர்மா மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கக்கூடும் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோகித் தவிர, இந்திய அணியின் கேப்டனாக அனுபவம் கொண்ட சூர்யகுமார் யாதவ், துல்லியமான பந்துவீச்சால் மிரட்டும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நியூசிலாந்தின் அனுபவ வீரர் மிட்செல் சான்ட்னர் ஆகியோரது பெயர்களும் கேப்டன் ரேஸில் பலமாக அடிபடுகின்றன. மும்பை அணியின் சரிவை மீட்க மீண்டும் ரோகித்தின் ‘மேஜிக்’ கை கொடுக்குமா அல்லது புதிய ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஐபிஎல் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
