
பிரிட்டனில், 32 வயதான ஜேட் டமரெல் என்ற அனுபவம் வாய்ந்த ஸ்கைடைவர் ஒருவர், தனது காதலருடன் நடந்த பிரிவுக்கு அடுத்த நாளே 10,000 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான தகவலின்படி, ஜேட், தெற்கு வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். அவர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் முதல், 26 வயதான மற்றொரு ஸ்கைடைவரான பென் குட்ஃபெலோவ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் 6 மாதத்திற்கு மேலாக காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று, பென் தனது காதலை முடிவுசெய்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். “இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள். மற்றவர்களுடன் அதிகமாக கலந்துரையாடாதவர்கள். அவர்களின் உறவு மிகவும் நெருக்கமானது. ஆனால் ஜேட் இறக்கும் முந்தைய இரவு, பென் அவருடன் உறவை முடித்தார். மறுநாள் வேலைக்கு சென்ற பின், ஜேட் ஸ்கை டைவிங் செய்து தற்கொலை செய்து கொண்டார்.
தொடக்கத்தில் இது ஒரு விபத்தாகக் கருதப்பட்டாலும், SkyHigh Skydiving நிறுவனம், இது திட்டமிட்ட தற்கொலைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் என்று அறிவித்தது. காரணம், ஸ்கைடைவ் சாகசத்திற்குப் பயன்படுத்திய உபகரணங்களில் எந்தவித கோளாறும் இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசாரும் ஜேடின் அறையில் தற்கொலைக் கடிதம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதில், காதலர் பிரிவு குறித்து குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஜேட் 80க்கும் மேற்பட்ட ஸ்கைடைவ் சாகசங்களை செய்திருந்தார்.
சம்பவ இடமான ஷாட்டன் காலரியில் உள்ள வ்ரெஃபோர்ட்ஸ் பண்ணை அருகே அவசர சேவை ஊழியர்கள் விரைந்து சென்றபோதும், ஜேட் தரையில் விழுந்த நிலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவம், உலகளவில் ஸ்கைடைவிங் சமூகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.