
இந்திய வரலாற்றில் முதன் முறையாக சிறப்பாக பணிபுரிந்ததற்காக தாய் மகன் இருவரும் ஜனாதிபதி கையால் விருது பெற இருக்கிறார்கள். அதாவது இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணிபுரியும் சாதனா சக்சேனா நாயர். இவர் புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் குடும்ப மருத்துவம், குழந்தைகள் நலன், சுகாதார மேலாண்மைக்காக பட்டம் பெற்றவர். இஸ்ரேல் மற்றும் ஸ்விட்சர்லாந்து ராணுவ மருத்துவ சேவையில் பயிற்சி பெற்றவர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவ மருத்துவ சேவைக்கான ஜெனரலாக பதவியேற்றார். இதன் மூலம் இந்த பதவிக்கு வந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாதனா பெற்றார்.
இவர் இந்திய விமானப்படையின் மேற்கு பிராந்தியத்தில் பணிபுரிந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரிரங்கன் குழுவிலும் முக்கிய பங்கு வகித்ததுள்ளார். இவருடைய சேவையை பாராட்டும் வகையிலும் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இவருக்கு விஷிஸ்ட் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மகன் தருண் நாயர். இவர் விமானப்படையில் ஸ்குவார்டன் லீடராக இருக்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்த நிலையில் வீரதீர செயலுக்கான வாயு சேனா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே வருடத்தில் ஆயுதபடையில் பணியாற்றும் தாய் மகன் இருவரும் ஜனாதிபதி கையால் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும்.