கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சச்சிதானந்தம் தனது மகள் வைஷ்ணவியை (27) அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (35) என்பவரை திருமணம் செய்திருந்தார். தினேஷ் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், அங்கு ஓர் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பை கண்டித்த வைஷ்ணவியை தினேஷும், அவரது பெற்றோர்களான நடராஜன் (65), ஜோதி (53) ஆகியோரும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வைஷ்ணவி, 2022 ஆம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, வைஷ்ணவியின் தந்தை சச்சிதானந்தம் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தினேஷ், நடராஜன், ஜோதி ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி டி. செல்வம், வைஷ்ணவியின் தற்கொலைக்கு தூண்டியதற்கான குற்றச்சாட்டில் தினேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு தலா 10 ஆண்டு கடும் சிறை தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்தார். இதனையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞராக ம. ராஜா பங்கேற்றார்.