புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த வகையில் முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் எண்ணத்தோடு அந்த குற்றம் அரங்கேறியுள்ளது.

முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பூவை ஜகன் மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூருக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பேசினார். விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். விமான நிலையம் அமைக்க வேறு இடத்தை தேர்வு செய்யலாம் என பரிந்துரை செய்தார்.

அடுத்ததாக அவர் வேங்கை வயலுக்கு செல்ல போவதாக அறிக்கை விட்டார். அதற்கு முன்னரே பிரச்சனையை முடிக்க வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள் என அவர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். விஜய் வேங்கை வயலுக்கு செல்வதற்கு முன்னரே இந்த வழக்கை முடித்து விட்டால் அவர் அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்பதற்காக அவசர அவசரமாக வழக்கை திட்டமிட்டு முடிப்பதாக பூவை ஜகன் மூர்த்தி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.