
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கனமழையின் போது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனோகர் காமத் என்ற 63 வயது நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் இங்கு மழையின் காரணமாக தரைதளத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மின்மோட்டார் உதவியுடன் வெள்ள நீரை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில் பரத் என்பவரின் 12 வயது மகன் தினேஷ் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் பாய்ந்தது.
இதனால் மனோகர் துடிதுடித்த நிலையில் தினேஷ் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் இருவரும் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னதாக கனமழையின் போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு 35 வயது பெண் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.