தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திருப்பத்தூர் தொகுதி முடிவுகள் தான் தற்போதைய ஹாட் டாபிக். வெறும் ‘ஒரே ஒரு ஓட்டு’ வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், தற்போது இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான போதே இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, இதற்காக நீதிமன்றம் செல்லப்போவதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த நிலையில், இப்போது சட்டப் போராட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் என்பது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புவதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் பெரியகருப்பன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒருவேளை உச்ச நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டால், அது தவெக-வின் வெற்றி எண்ணிக்கையிலும், ஆட்சியமைக்கும் கணக்கிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். திருப்பத்தூர் தொகுதியில் ஏற்பட்டுள்ள இந்தச் சட்டச் சிக்கல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
