அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் ஜோசப் என்பவர் திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை கடுமையாக தாக்கியதோடு அவரது மகனையும் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் இருவரும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் வீட்டின் வாசலில் காயத்துடன் அமர்ந்திருந்த ஜோசப்பை கைது செய்ததோடு சிறுவனின் சடலத்தை மீட்டு அவனது தாயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுவனின் உடலில் மொத்தம் 26 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டது. ஜோசப் இருவரையும் தாக்கும் போது நீங்கள் முஸ்லிம்கள் இறக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறியதாக அந்த பெண் தனது கணவருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த தாக்குதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்று அமெரிக்க மற்றும் இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இது வெறுப்புணர்வின் பயங்கர செயல் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.