தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரவிச்சந்திரா ரெட்டி என்பவர் ஆவார். இவரது வீட்டிற்கு கடந்த 10-ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள்  ரவிச்சந்திராவையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளனர். பின் அந்த மர்மநபர்கள் ரவிச்சந்திராவை கடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள 83 மடிக்கணினியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரவிச்சந்திராவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திராவை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரு ஹோட்டலில் இருந்து ரவிச்சந்திராவை காவல்துறையினர் மீட்டனர். அதோடு கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மடிக்கணினிகள், கார்கள், மொபைல்கள், பாஸ்போர்ட்டுகள், மற்றும் பைக் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரவிச்சந்திரா நிதி சிக்கல் காரணமாக தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சில மாதங்களாகவே சம்பளம் கொடுக்காதது தெரிய வந்தது. இதில் கோபமடைந்த சில  ஊழியர்கள் ரவிச்சந்திராவை திட்டமிட்டு கடத்தியதும் தெரிய வந்தது.