
ஹைதராபாத் நகரின் இப்ராஹிம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள விஜயலட்சுமி மருத்துவமனையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி பெறாத செவிலியர்கள், ஒரு மருத்துவரின் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழிகாட்டுதலின் கீழ் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில், குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்தது.
தகவலின்படி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்தி என்பவர் கடும் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். ஆனால் மருத்துவர் நேரில் வராமல், வீடியோ அழைப்பின் மூலமாகவே வழிகாட்டினார்.
அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட கடுமையான இரத்தப்போக்கால் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். சம்பவத்துக்குப் பிறகு, மருத்துவமனைக்கு வந்த ரங்காரெட்டி மாவட்ட சுகாதார அதிகாரி வெங்கடேஷ்வர ராவ் உடனடியாக மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தார். பிற நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
“நாங்கள் ஐந்து மாதங்களாக இந்த மருத்துவமனைக்கு சென்று அனைத்து பரிசோதனைகளையும் செய்தோம். எதற்காக இப்படி நடந்தது?” என அந்த பெண்ணின் கணவர் கணேஷ் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அலட்சியமாக இருந்த பெண் மருத்துவர் அனுஷா ரெட்டிக்கும், செவிலியர்களுக்கும் எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.