கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 64 பேர் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து 10 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் விஷ சாராய விவகாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது மிகவும் அதிகம் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஷச் சாராய விவகாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது மிகவும் அதிகம். எனவே இது தொடர்பாக தமிழக அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மறுபரிசீலனை செய்த பிறகு தமிழக அரசு தன் கருத்தினை தெரிவிக்க வேண்டும் எனக்கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.