பயிர் காப்பீட்டு திட்டம் சென்ற 2016-2017ம் வருடம் முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 2020-2021 ஆம் வருடத்தில் இருந்து இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையிலும், பாசனவசதி உள்ள மாவட்டங்களுக்கு 25% வரை பங்களிப்பிலும், மாநில அரசின் 60-65 சதவீத பங்களிப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021-22ம் வருடத்தில் இந்த திட்டம் 37 மாவட்டங்கள் உட்பட 14 தொகுப்புகளில் இணை காப்பீட்டுத் திட்டமாக 80:20 விகிதத்தில் இடர் நிகழ்வுகளை ஏற்று, மாநில அரசுடன் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் இணைந்து செயல்படுத்தியது. இந்த நிலையில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட 2.21 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகையாக மொத்தம் ரூ.318.30 கோடி வழங்கப்படுகிறது. இப்பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று 5 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கி துவங்கி வைத்தார்