
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக தாங்கள் ஆடும் போட்டிகளை மட்டும் இலங்கை அல்லது துபாயில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என இந்திய அணியினருக்கு முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அவர்களுக்காகவாது கண்டிப்பாக விராட் கோலி வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் கொடுக்கும் விருந்தோம்பலை பார்த்து இந்தியாவையே விராட் கோலி மறந்துவிடுவார். எனவே விராட் கோலி பாகிஸ்தானில் விளையாடுவதை காண நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.