தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய்யை, திமுக அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது சம்பளம் குறித்து மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “விதை விதைத்த உடனே முளைக்கும் முன்பே ஊழல் குற்றச்சாட்டுகளைப் பேசும் விஜய், தான் வாங்கும் பல கோடி ரூபாய் சம்பளத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சினிமாத்துறையில் உச்சகட்ட சம்பளம் வாங்கும் ஒருவர், ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் தனது வருமான விவரங்களைத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

​மேலும், “ஆட்சி நிர்வாகம் என்பது கேமரா முன்னால் செட் போட்டு நடிக்கும் சூட்டிங் கிடையாது” என்று கூறிய அமைச்சர், நிஜ வாழ்க்கையும் அரசியலும் முற்றிலும் மாறுபட்டவை என்று விஜய்யைச் சாடியுள்ளார். அண்மைக்காலமாகத் தமிழக அரசின் திட்டங்களையும், வேளாண் கொள்கைகளையும் விஜய் விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இவ்வாறு பேசியுள்ளார். அரசியலில் இன்னும் முளைக்கவே இல்லை, அதற்குள் இப்படிப் பேசுவதா? என்ற ரீதியில் அவர் விஜய்யை “நேற்று முளைத்த காளான்” என்றும் விமர்சித்துள்ளது தவெக தொண்டர்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலை நோக்கி நகரும் வேளையில், திமுக மற்றும் தவெக இடையிலான இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.