நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் செய்பவர்களுக்கு சவாலாக இருப்பது நல்ல உணவு கிடைப்பதுதான். இதற்காக ஐஆர்சிடிசி தனியாக உணவு சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அதில் ஒரே மாதிரியான உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் ரயில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை அவர்கள் விரும்பும் உணவகத்திலிருந்து இப்போது பெறலாம். ஐஆர்சிடிசி மற்றும் ஸ்விக்கி இடையே செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சேவைகள் இன்று முதல் கிடைக்கும். முதற்கட்டமாக விசாகப்பட்டினம், விஜயவாடா, புவனேஸ்வர் மற்றும் பெங்களூரு நிலையங்களில் இந்த சேவைகள் தொடங்கப்படும். ஸ்விக்கியில் உணவை ஆர்டர் செய்ய ஐஆர்சிடிசி செயலியைப் பயன்படுத்த வேண்டும்.