சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் சாலிகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி ரம்மி விளையாடி வந்துள்ளார். மொத்தமாக ரம்மி விளையாட்டில் கிருஷ்ணமூர்த்தி 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது.

முதலில் சிறிய தொகைகளை முதலீடு செய்த கிருஷ்ணமூர்த்தி நாளடைவில் விட்டதை பிடிக்கிறேன் என்று கூறி 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார். நேற்று கிருஷ்ணமூர்த்தி தனது பிள்ளைகளுக்கு இறுதியாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.