தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில், கடந்த 27ஆம் தேதி முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வந்ததற்கான நோக்கம், அரசியல் எதிரி போன்றவைகளை அறிவித்ததோடு கட்சியின் கொள்கைகள் போன்றவற்றையும் அதிரடியாக வெளியிட்டார். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் விஜய் அறிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவரையும் எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு அவருடைய ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் பேசி வருகிறார்கள்.

விஜயின் அரசியல் பயணம் கண்டிப்பாக தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையலாம் என்று அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் தன் முதல் மாநாட்டினை நடத்தி முடித்த நிலையில் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் விஜய் 234 தொகுதிகளுக்கும் அதாவது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.மேலும் நடிகர் விஜய் விரைவில் சூறாவளி பயணம் மேற்கொள்ள இருப்பதால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.