விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசிப்பது நல்லது தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கட்சி என்றால் எல்லா கட்சிகளுக்குமே ஒரு ஆசை இருக்கும்.  அந்த வகையில் அவர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசிப்பது நல்லது. அவருடைய முடிவு இது. நான் வந்து கருத்து செல்வதற்கு இதில் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் எந்த சூழலிலும் சரி அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் உண்டு. அதிமுகவின் வாக்குகள் எங்கேயுமே போவதற்கு வழி கிடையாது.

ஸ்டாலின் மாடல் அரசு மக்களுக்கான அரசு கிடையாது. அது ஒரு கார்ப்பரேட் அரசு. ஏழைகளைப் பற்றி சிந்தித்தால் கரண்ட் பில் ஏற்றுவார்களா? சொத்து வரியை ஏற்றுவார்களா..? அரசு ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருமே போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களும் சரி அனைத்திந்திய அண்ணா திராவிட தொண்டர்களும் சரி நினைப்பது ஒன்றுதான். மீண்டும் அம்மா அரசு மலர வேண்டும். இதன் மூலம் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படும். நல்ல காலம் பிறக்கும் அந்த கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.