நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை எங்கள் சின்னம் என்று கூறி விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அவர் கூறியதாவது, யானை என்பது ஒரு கட்சிக்கு மட்டும்தான் சொந்தமானதா.? தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் பற்றி பேசுகின்றனர். அவர் ஒரு புகழ் பெற்ற நடிகர் என்பதால் அவர் கட்சி ஆரம்பிக்கும் போது என்னைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். விஜயின் கொள்கைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆயிரந்தான் இருந்தாலும் அவர் என்னுடைய தம்பி.

எனவே விஜய்யை எப்போதும் ஆதரிக்கவே செய்வேன். ஒருவேளை விஜய் எனக்கு எதிராக வேலை செய்தால் கூட நான் அவருக்கு ஆதரவு மட்டும் தான் கொடுப்பேன். அதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது என்று கூறினார். மேலும் முன்னதாக அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் முதல் மாநாட்டுக்கு நீங்கள் செல்வீர்களா என்று சீமானிடம் கேட்டபோது நான் தமிழக வெற்றி கழக மாநாட்டுக்கு சென்றால் நாம் தமிழர் கட்சியினர் ஆயிரம் பேர் எங்கள் கட்சி கொடியை ஏந்தி கொண்டு வருவார்கள். நான் மேடை ஏறும்போது சீமான் வாழ்க என்று கோஷம் இடுவார்கள். அப்படி செய்தால் அது விஜயின் மாநாடாக அமையாது. அது விஜயின் மாநாடு. எனவே அங்கு அவருடைய கொடி மட்டும்தான் பறக்க வேண்டும் என்று கூறினார்.