
தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாளான இன்று பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது கையெழுத்து இடப்பட்டு உறுதி செய்யப்பட்டது தான் ராஜ்யசபா பதவி. ராஜ்யசபா தேர்தல் வரும்போது தேமுதிக சார்பாக யார் செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம். விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்.
20 ஆண்டுகளாக இருக்கக்கூடிய எங்கள் கட்சியை பார்த்து நீங்கள் இந்த கேள்வியை கேட்கக்கூடாது. ஏற்கனவே நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நான் எந்த ஒரு கருத்தையும் கூற விரும்பவில்லை. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று கேப்டன் கனவை வென்று எடுப்போம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.