தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5-ஆம் தேதி புதுச்சேரியில் பிரம்மாண்டமான ‘ரோடு ஷோ’ நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அண்டை மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவில் மக்கள் திரள்வார்கள் என்றும், இதனால் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்டதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது என்றும் கூறி, புதுச்சேரி காவல்துறை இந்த ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்துள்ளது. ஒரு வார காலமே உள்ள நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது விஜய்க்கும், தவெக நிர்வாகிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காவல்துறையின் அனுமதியை மீறி இந்த ரோடு ஷோவை நடத்த முடியாது என்ற நிலையில், எப்படியாவது அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று தவெக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவெகவின் முக்கிய நிர்வாகியான புல்லி ஆனந்த் இதற்கான முயற்சிகளில் முனைப்புக் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி காவல்துறை எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தவெகவின் அரசியல் பயணத்தில் தற்காலிகத் தடையாகப் பார்க்கப்படுகிறது.
