நடிகர் விஜய் சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசியல் கருத்தில், “திமுகவோ, அதிமுகவோ, பாஜகவோ உடன் கூட்டணி வைக்க மாட்டேன்” என உறுதியுடன் தெரிவித்தார். இந்த கருத்துக்கு பதிலளித்த நடிகை மற்றும் அரசியல் பிரமுகர் கௌதமி, “அது அவருடைய தனிப்பட்ட முடிவு. வருவதைப் பொறுத்து பார்த்தால்தான் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என கூறியுள்ளார்.

அதே நேரத்தில், “திமுக ஆட்சி இன்று தமிழ்நாட்டிற்கு பெரிய அபாயமாக உள்ள நிலையில், அந்த ஆட்சியை அகற்றுவதே அனைத்து நாட்டினரின் மற்றும் கட்சியின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்” என்றும், “தமிழகத்தின் நலனுக்காக மட்டுமல்ல, பாதுகாப்புக்காகவும் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்ற கட்டாய நிலையில் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும்” என்றும் கௌதமி வலியுறுத்தினார்.

அதிமுகவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள தமிழகம் முழுவதுமான சுற்றுப்பயணம் பற்றி பேசும் போது, “அவரது வார்த்தைகளும் செயற்பாடுகளும் கடந்த சில மாதங்களாக மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. நியாயம் – அநியாயம் என்ற அடிப்படையில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதில்களுடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணம் அந்த இலக்கை நிறைவேற்றும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்” என்றும் கௌதமி தெரிவித்தார்.