பெரம்பலூர் மாவட்டம் ரம்பலூர் அருகே உள்ள லப்பைகுடிக்காடு கனரா வங்கியில் பணியாற்றிய வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.02 கோடி நகைக் கடன் பெற்றுத் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த ஆகாஷ் சௌகான் (29) என்பவர், 2022-ஆம் ஆண்டு முதல் லப்பைகுடிக்காடு கனரா வங்கிக் கிளையில் நகைக் கடன் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த ஐந்து வாடிக்கையாளர்களின் கணக்கில் போலி நகைக் கடன் ஆவணங்களை உருவாக்கி, வங்கியில் இருந்து ரூ.1.02 கோடியை பெற்றுக்கொண்டு தனது  தனிப்பட்ட கணக்கில் செலுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த கனரா வங்கி மண்டல அலுவலக உதவிப் பொது மேலாளர் லோக கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, ஆகாஷ் சௌகானை கைது செய்தனர்.

பின்னர் அவரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் அனுப்பி வைத்தது. இந்த வங்கி மோசடி வழக்கில் தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.