கோயம்புத்தூர் மாவட்டம் இடையார்பாளையம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு திருப்பதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் விளையாட்டில் திருப்பதி தனது முழு கவனத்தையும் செலுத்தி நேரத்தை செலவிட்டு வந்தார். இதனால் குடும்பம் நடத்த வருமானம் இல்லாததால் திருப்பதியின் மனைவி அவரை கண்டித்துள்ளார்.

மேலும் கோபத்தில் அவர் தனது பிள்ளைகளுடன் கரூரில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னரும் திருப்பதி தொடர்ந்து ஆன்லைனில் விளையாடியதாக தெரிகிறது. இதனையடுத்து பண பிரச்சனையால் அவதிப்பட்ட திருப்பதி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று திருப்பதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.