சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய பிறகு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறந்த கல்வி முறை இருக்கிறது. தமிழக பாடத்திட்டங்களில் படித்தவர்கள் இன்று பல்வேறு நிலைகளில் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மருத்துவர்கள் ஆகவும் விஞ்ஞானிகளாகவும் உயர்ந்த பதவிகளில் பொறுப்பு வகிக்கின்றனர்.

வயிற்றெரிச்சல் பிடிச்சவங்க. அதனால் தான் மாநில அரசின் பாடத்திட்டத்தின் மீதும் கொள்கை மீதும் குறை சொல்கிறார்கள். ஆசிரியர் பணி என்பது அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் பணி. தமிழ்நாடு பாடத்திட்டத்தை குறை கூறினால் அது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அவமானப்படுத்துவது போன்றது. மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட தூண்டுவது தான் சிறந்த கல்வி முறை. தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் நிச்சயம் வருங்காலத்தில் சிறந்த மற்றும் உயர்ந்த பதவியில் இருப்பார்கள் என்று கூறினார். மேலும் ஆளுநர் ரவி சமீபத்தில் மாநில பாடத்திட்டத்தை விமர்சித்த நிலையில் அதற்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.