நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது வரும் ஜூலை ஏழாம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதே நாளில் கோரக்பூர் முதல் லக்னோ வரையும் ஜோத்பூர் முதல் அகமதாபாத் வரையும் என மொத்தம் மூன்று ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்னதாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் விளம்பர செலவிற்கு 1.5 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பிரதமர் நேரில் சென்று வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைப்பதால் பல கோடி ரூபாய் செலவாவதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.