பெங்களூருவில், கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள மீனகுண்டே ஹொசூர் கிராமத்தில், நகரத்தின் முதல் ஃபெராரி ஷோரூம் மார்ச் மாத இறுதியில் திறக்கப்பட்டது. 10,000 சதுரஅடி பரப்பளவுள்ள இந்த ஷோரூம் மாதம் ரூ.8 லட்சம் வாடகை செலுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த ஷோரூம் திறப்பு தொழில்நுட்ப நகருக்கு பெருமை சேர்க்க வேண்டிய நிலையில், இணையத்தில் இது நகைச்சுவையுடன் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அதாவது, “ஃபெராரி ஓட்ட சாலையே இல்லையே…!” என்ற ஆச்சரியத்துடன் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘X’ பயனர் ஒருவர், “பெங்களூருவில் இப்படி ஒரு கார் ஓட்ட எங்கே சாலை இருக்கு?  குழிகளில் கார் அடிக்கடி விழுந்துடும்!” என குறிப்பிட்டார். மற்றொருவர், “இந்த கார் நிறுவனமே சாலை கட்டி கொடுக்கணும் போல இருக்கு!” என சாடினார்.

இந்த ஷோரூம் புதிய மற்றும் pre-owned ஃபெராரிக்களையும் விற்பனை செய்யும். இதற்கு முன்னும் மும்பை மற்றும் டெல்லியில் ஃபெராரி ஷோரூம்கள் இயங்கிவருகின்றன. பெங்களூருவில் ஏற்கனவே 20-30 ஃபெராரிகள் சாலையில் இருப்பதாக கூறப்படுகிறது.