வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிற 25-ம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.

தொடர்ந்து இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும், வருகிற 25-ஆம் தேதி காலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக உருவெடுக்கும். இது 26-ஆம் தேதி மாலை தீவிரப் புயலாக புயலாக வலுவடைந்து மேற்குவங்க கடற்கரை ஒட்டி இருக்கும் வங்காள தேசத்தை ஒட்டி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரப் புயலாக கரையை கடக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். புயல் கரையை கடந்து காற்றின் வேகம் மாறும் பட்சத்தில் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய  மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புயல் உருவாகும் பட்சத்தில் ஓமன் நாட்டின் பரிந்துரைப்படி REMAL என புயலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது . புயல் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதால் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரா ஆகிய கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலின் சீற்றம் அதிகமாக கொந்தளிப்புடன் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.