தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்தடுத்த இரு தினங்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.