டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட லட்சுமிபாய் மகளிர் கல்லூரியின் முதல்வர் ப்ரத்யுஷ் வத்சலா வகுப்பு அறை சுவர்களில் மாட்டு சாணம் பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த முதல்வர், இது “பாரம்பரிய இந்திய அறிவைப் பயன்படுத்தி வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆய்வு” எனும் ஒரு ஆராய்ச்சி திட்டத்தின் பகுதியாக நடப்பது என்று கூறினார். “இது இன்னும் நடந்து கொண்டிருக்கும் ஆய்வு தான். ஒரு வாரத்தில் முழு விவரங்களும் வெளியிடப்படும். இயற்கை மண்ணைத் தொடுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை,” என பி.டி.ஐ.க்கு அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த சாணம்  பூசும் வீடியோவை, முதல்வர் தனது ஆசிரியர் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதில், ‘இந்த வகுப்பு அறைகள் விரைவில் புதிய தோற்றத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்தை இனிமையாக்கும் முயற்சியாக இது செய்யப்படுகிறது’ எனும் செய்தியுடன், சி பிளாக் பகுதியில் பாரம்பரிய முறைப்படி சுவர்கள் பூசப்படுவதாக காணப்படுகிறது. முதல்வரின் இந்த செயலை சிலர் பாரம்பரியத்தை பாதுகாப்பதாக பார்ப்பது போலவே, சமூக வலைதளங்களில் பலர் இது கல்வி நிலையத்தின் மதிப்பை குறைக்கும் செயல் எனவும் விமர்சித்துள்ளனர்.

யுபிஎஸ்சி பயிற்சி அளிக்கும் பேராசிரியர் விஜேந்தர் சவுகான், “இப்படிப் பாரம்பரிய வழிகளை ஆதரிக்கும் ஒரு கல்வி நிறுவனம் மூலம் பட்டம் பெற்ற ஒருவர், வேலைவாய்ப்பு சந்தையில் நம்பிக்கையை எப்படிப் பெற முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு நெட்டிசன், “முதலில் கல்லூரிக்குள் மாட்டை கட்டினார், இப்போது சுவர்களில் சாணத்தை  பூசுகிறார்கள்; நாளை கல்வி நிறுவனங்களில்கோமியம்  குடிக்க கட்டாயம் செய்யலாமா?” என கேள்வியுடன் விமர்சித்துள்ளார். 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு நிர்வாக கல்லூரி, தற்போது ஐந்து பிளாக்குகளைக் கொண்டதாகும், இதில் ஒன்று இந்த புதிய முயற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.