திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 18 வயது இளம்பெண், அளவுக்கு அதிகமான போதை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள் சப்ளை செய்த உயிரிழந்த பெண்ணின் தாயாரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஆசாத். இவரது மகள் யாஸ்மின் (18). கேட்டரிங் தொழில் செய்து வந்த இவர், ஜாகீர் உசேன் மகன் சதாம் உசேன் (19) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, திருச்சி சந்திப்பு அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கணவன்-மனைவி எனக் கூறி அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

நேற்று மாலை சுமார் 5 மணி அளவில், விடுதி அறையில் இருந்த யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த சதாம் உசேன், தனது நண்பரான ஷேக் அப்துல்லா (19) என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இருவருமாகச் சேர்ந்து யாஸ்மினைஅருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு யாஸ்மினின் உடல்நிலை மிக மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு யாஸ்மினைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த திருச்சி  போலீஸார், யாஸ்மினின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, மர்ம மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சதாம் உசேனும், யாஸ்மினும் விடுதி அறையில் இருந்தபோது, போதை மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டு உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. அளவுக்கு அதிகமான போதை மருந்து உடலில் ஏறியதே யாஸ்மினின் வலிப்புக்கும், மரணத்திற்கும் காரணம் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடத்தல் மற்றும் சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சதாம் உசேன் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

உயிரிழந்த யாஸ்மினுக்கும் சதாம் உசேனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு யாஸ்மின் மைனராக இருந்தபோது, சதாம் உசேன் அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் அளித்த புகாரின் பேரில், சதாம் உசேன் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார். யாஸ்மின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறையிலிருந்து சதாம் உசேன் ஜாமீனில் வெளிவந்த பிறகு, இருவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாகச் சுற்றித் திரிந்துள்ளனர். இருவரது கைகளிலும் ஆங்காங்கே ஊசி செலுத்திக்கொண்ட தழும்புகள் இருப்பதால், இருவருக்குமே போதை ஊசி செலுத்தும் பழக்கம் நீண்டநாட்களாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

கைதான சதாம் உசேனுக்கு போதை மாத்திரைகளும், ஊசிகளும் எப்படி கிடைத்தன என்று போலீஸார் விசாரித்தபோது மற்றொரு அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. உயிரிழந்த யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகமே போதைப்பொருட்களை ரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளார். தாய்க்குத் தெரியாமல் யாஸ்மின் வீட்டிலிருந்த போதை மாத்திரைகளைத் திருடிக் கொண்டு காதலனுடன் லாட்ஜிற்குச் சென்றுள்ளார். தற்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகத்தைப் போலீஸார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார் யாருக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்தார், பின்னணியில் இருக்கும் கும்பல் யார் என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.