
தேனி மாவட்டத்திலுள்ள வட புதுப்பட்டி பகுதியில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களாக அந்த பகுதியில் குளிர் அதிகமாக இருந்ததால் காப்பகத்தில் இருந்தவர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அந்த வகையில் சம்பவநாளில் அக்கம்மாள் (64) என்ற மூதாட்டியும் அங்கே காய்ந்த இலைகளை கூட்டி தீ வைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய உடை எதிர்பாராத விதமாக தீயில் பட்ட நிலையில் மளமளவென தீ உடம்பு முழுவதும் பரவியது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்ட நிலையில் அவருடைய உடல் முழுவதும் தீக்காயங்கள் அதிகமாக இருந்தது. அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மேலும் இது தொடர்பாக விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.