சென்னை மாவட்டம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென்காசியில் இருந்து தாம்பரம் செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு பை மட்டும் தனியாக கிடந்தது. போலீசார் அதனை எடுத்து சோதனை செய்தபோது அதில் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் உடைமைகள் இருந்தது.

அதனை கைப்பற்றிய போலீசார் பையை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரயில்வே காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சிறிது நேரம் கழித்து ஒரு போன் வந்தது. அதில் தென்காசியில் இருந்து தாம்பரத்திற்கு ரயிலில் வந்த பயணி ஒருவர் தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கிய போது பையை மறந்து விட்டதாக கூறினார்.

அந்த நபரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது ரயிலில் தவற விட்ட பை அவருடைய தான் என்பது உறுதி செய்யப்பட்டது‌. எனவே போலீசார் அந்தப் பையை உரியவரிடம் ஒப்படைத்தனர். ரயிலில் தவறவிட்ட பொருள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதால் அந்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.