ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்தார். நாட்டுக்காக உயிரை விட்ட முரளி நாயக்கின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்தார். இந்த நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் முரளியின் குடும்பத்தினருக்கு தனது சொந்த நிதியிலிருந்து 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.