தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராவல் மண் எடுக்கும் பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. ராசாமணி குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தனிநபர் ஒருவர் தனது பினாமிகள் மூலம் அரசு மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மண் எடுத்து வருவதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் மண் வெட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அரசுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த முறைகேடுகளுக்குப் போலி அனுமதிச் சீட்டுகள் பயன்படுத்தப்படுவதால், அப்பாவி லாரி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுப் பாதிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

இது குறித்து கனிமத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த ஊழலில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.