ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கேபி முனுசாமி மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசிய ஆடியோ. இந்த ஆடியோவில் கொளத்தூர் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக நியமிக்க கேபி முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும், முதல் கட்டமாக கிருஷ்ணமூர்த்தி 50 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்துவிட்டதாகவும் பேசுகிறார்கள். இந்த ஆடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இது தொடர்பாக தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

அதாவது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அரசியலில் கொடுக்கல் வாங்கல் என்பது சகஜமான ஒன்று. இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது நாகரீகமான செயல் கிடையாது. அந்த ஆடியோவில் தான் எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக கேபி முனுசாமி ஒரு இடத்தில் கூட கூறவில்லை. இதனால் அந்த ஆடியோ உண்மையாக இருக்கலாம். ஆனால் அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை என்று கூறினார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் வெற்றி என்பது நிச்சயமான ஒன்று என்றும் கூறினார்.