
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் நடிகர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை எனவும் மக்கள் பிரச்சினை பற்றிய புரிதல் இல்லை எனவும் விமர்சித்திருந்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாகவே பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜயையும் விமர்சிக்கிறார். இவர் நடிகர் விஜயுடன் சேர்ந்து கில்லி, வாரிசு உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு பதிவையும் போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
திரைக்கலைஞரும் – சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ்ராஜ் சார், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது நாம் உடன் இருந்தோம். இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பை – மதச்சார்பின்மையை காப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும் என்பது உட்பட பல ஆழமான கருத்துக்களை பிரகாஷ்ராஜ் சார் பகிர்ந்து கொண்டார். அவருடைய திரையுலகப்பணி மட்டுமன்றி, சமூகப்பணியும் சிறக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் திமுக மற்றும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக விஜய்க்கு எதிராக பிரகாஷ்ராஜை வைத்து திமுக காய் நகர்த்துவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பிரகாஷ்ராஜுடன் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியதாக வெளியிட்ட பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.