ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரத்தை சேர்ந்த ரவீனா (32) என்பவர், தனது கணவர் பிரவீன் (35) மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலமாக சுரேஷ் என்ற நபருடன் பழகிய ரவீனா, அவருடன் இணைந்து ஷார்ட்ஸ் வீடியோக்கள் உருவாக்கி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும், ரவீனா தொடர்ந்து சுரேஷுடன் வீடியோக்களில் இயங்கி வந்தார். அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்வோர்களுடன் பிரபலமானதாக இருந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி, ரவீனா தனது காதலர் சுரேஷுடன் அந்தரங்கமாக இருப்பதை கணவர் பிரவீன் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில், ரவீனா மற்றும் சுரேஷ் சேர்ந்து பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை பைக்கில் ஏற்றி 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாக்கடையில் தூக்கி எறிந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல் அடிப்படையில், மார்ச் 28 அன்று பிரவீனின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவத்தை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அருகிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் உண்மை வெளிப்பட்டது. இதனையடுத்து ரவீனாவும் சுரேஷும் கைது செய்யப்பட்டனர். தற்போது இருவரும் காவலில் இருக்கின்றனர். பிரவீன் – ரவீனாவின் 6 வயது மகன், தனது தாத்தா பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளான். இந்த கொலை வழக்கு ஹரியானா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.