உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறப்பு விழாவானது நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் ராமரின் சிலை திறந்தவுடன் சிலை முன்பு கண்ணாடி காட்டப்பட்டதோடு கண்களில் மை வைக்கப்பட்டது. இதுகுறித்து சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், புதிதாக கோவிலில் சிலைகள் திறக்கப்பட்டால் அதனை திருச்சிலைகள் என்பார்கள். பிரான பிரதிஷ்டை கும்பாபிஷேகத்துக்கு பிறகு தான் அந்த திருச்சிலையானது தெய்வ திருமேனி கொண்டதாக மாறும் என்பது ஐதீகம். அதோடு கும்பாபிஷேகத்தின் போது மந்திரங்கள் கூறப்படும்.

அவ்வாறு கூறப்படும் மந்திரங்கள்தான் சிலைகளுக்கு அருளையும் சக்தியையும் அளிக்கும். அவ்வாறு மந்திரத்தின் மூலம் அளிக்கப்படும் சக்தியானது சிலையின் கண்கள் திறக்கப்படும்போது வெளிப்படும். அவ்வாறு வெளிப்படும் அருள் மற்றும் சக்தியானது மீண்டும் கடவுளிடம் செல்லவேண்டும் என்பது மரபு. அதனாலே ராமர் சிலை முன் கண்ணாடி காட்டப்பட்டது என கூறப்பட்டுள்ளது.