ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வேலை காரணமாக கேரளாவில் உள்ள அலுவா நகருக்கு ஒரு வயது குழந்தையுடன் ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நபர் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் தூங்கிய பிறகு அந்த நபர் குழந்தையை தூக்கிக் கொண்டு உலவகேடு ரயில் நிலையம் வந்ததும் கீழே இறங்கினார். அப்போது குழந்தை அழுததால் அக்கம் பக்கத்தினர் அந்த நபரிடம் விசாரித்தனர். அவர் சரியாக பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதற்கிடையே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் பெற்றோர் குழந்தை காணாமல் போய்விட்டதாக திருச்சூர் ரயில்வே போலீசிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் குழந்தையை கடத்தி செல்ல முயன்ற நபரை அதிரடியாக கைது செய்து குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.