மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு வந்த அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இந்த பணத்தை திரும்ப சம்பாதிப்பதற்காக லெனின் வங்கியில் திருட முடிவு செய்துள்ளார். அதன்படி வங்கியில் திருட youtube-ல் வீடியோ பார்த்த அவர் அதற்கான உபகரணங்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் சம்பவ நாளில் அவர் கொளளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது உசிலம்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் லெனின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அருகில் சென்று பார்த்தபோது நிதி நிறுவனத்தின் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது. அதோடு அங்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் கொள்ளையடிப்பதற்கான உபகரணங்கள் இருந்தது. இதையெடுத்து காவல்துறையினர் தேடிய போது இருட்டில் பதுங்கி இருந்த லெனின் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. மேலும் இதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.