உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் பழமையான மற்றும் பெருமையான நிறுவனம் நோக்கியா தான். இந்த நிறுவனத்தின் தலைமையிடம் பின்லாந்தில் உள்ளது. தற்போது சீனா மற்றும் ஜப்பான் வெளியிட்டு வரும் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால் nokia பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. இந்த புதிய லோகோவை ஸ்பெயின் நாட்டில் பார்ஸிலோனா நகரில் நடைபெற்ற எம்.டபுள்யு.சி 2023 கண்காட்சியின் தொடக்கத்தில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய லோகோவில் ஐந்து ஆங்கில எழுத்துக்களும் பல வண்ணங்களும் அடங்கியுள்ளது.

மேலும் இது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மிகவும் சிறப்பாகவும் ஸ்மார்டாகவும் உள்ளது. இதனை அடுத்து நோக்கியா கார்ப்பரேஷனின் தலைவர் பெக்கா லண்ட்மார்க் கூறியதாவது “நாங்கள் எங்கள் யுத்திகளை புதுப்பித்துள்ளோம். இன்று நாங்கள் யார் என்பதை பிரதிபலிக்கும் வகையில் எங்களுடைய பிராண்டையும் மேம்படுத்துவோம். பெரும்பாலான மக்கள் மனதில் எங்களுடைய பிராண்ட் தான் நிற்கின்றது. அதனை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். ஆனால் நாங்கள் தற்போது நெட்வொர்க் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்களில் கவனம் செலுத்த விரும்புகின்றோம். மேலும் இது வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் மொபைல் ஃபோன்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.