
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு ஒன்றிணைந்த போதும் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக டிடிவி தினகரன் தனி கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகு இரட்டை தலைமைகளாக எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் கட்சியிலிருந்து ஓபிஎஸ் விலக்கப்பட்டார். தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என பன்னீர்செல்வம் அமைப்பை நடத்தி வருகிறார். அதிமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த நிலையில் தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அவர் பேசியதாவது, எங்களை விட்டு போக வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. நீங்களாகத்தான் போனீங்க. எங்கள் மீது பழி சுமத்தி பயனில்லை. சீனியர் என்கிறீர்கள்? 2001-ஆம் ஆண்டில் தான் நீங்கள் எம்எல்ஏ. நான் 1989-ஆம் ஆண்டு எம்எல்ஏ. அதிமுக மூழ்கும் கப்பல் கிடையாது. கரைசேரும் கப்பல். இதில் வந்தவர்கள் கரையேரலாம். ஏறாதவர்கள் நடுக்கடலில் போகலாம் என கூறியுள்ளார்.